கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதியின் அடிப்படையில் SSC, RRB தேர்வுகள் மூலம் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களும், வங்கிப் பணிகளில் பட்டப்படிப்பு தகுதியின் அடிப்படையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களும் அறிவிக்கப்படுகின்றன.
இத்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 250 மணி நேரம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கணிதம், பகுத்தறியும் திறன் (Reasoning), ஆங்கில மொழி ஆகிய பாடங்களுக்கு அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்குக் கணினி அறிவு (Computer Knowledge), வங்கி சார்ந்த பொது அறிவு (Banking Awareness) ஆகியவற்றுக்கும் சிறப்புப் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
மேலும், முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கான பயிற்சி, பாடங்கள் மீளாய்வு (Revision), சந்தேகங்களைத் தெளிவுபடுத்துதல் (Clarification) ஆகியவற்றுக்குத் தனித்தனி வகுப்புகள் நடத்தப்படும். பாடவாரியான தேர்வுகள், குறுந்தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் மூலமாகவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
ஏற்கனவே இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம்: [https://forms.gle/GYFTgqtbA3RHeNHA6]
மேலும் விவரங்களுக்கு 0422-2642388, 9499055937, 9499055938, 9865319116, 936576081 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.


