நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக கண் பரிசோதனை செய்ய வேண்டும்- மருத்துவர்கள் அறிவுறுத்தல்…

கோவை: நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவர் தென்னரசன் தெரிவித்துள்ளார்.

உலக நீரிழிவு நோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் “தி ஐ ஃபவுண்டேஷன்” கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாநகர காவல் துணை ஆணையர் அசோக்குமார் மற்றும் மருத்துவமனை மருத்துவர் தென்னரசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மருத்துவமனை முன்பு துவங்கிய இந்த பேரணியானது ஆர் எஸ் புரத்தை சுற்றி மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

இந்த பேரணியில் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

இது குறித்து பேட்டியளித்த மருத்துவர்கள், நீரிழிவு நோய் பாதிப்பு வந்தால் உடனடியாக கண்ணில் எந்த ஒரு பாதிப்பும் தெரியாது என்றும் பின்னர் அது கண்பார்வையை பாதிக்கும் என தெரிவித்தனர். எனவே நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நீரிழிவு நோயால் கண் பாதிக்கப்பட்டால் கண்ணில் ரத்தக் குழாய்கள் மூலம் ரத்தக் கசிவு, கண் நரம்புகளில் வீக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நோய் அதிகரித்தால் கண் நரம்புகள் விரிவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினர். தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்தில் பார்வை போனாலும் சிகிச்சை மூலம் மீண்டும் பார்வையை கொண்டு வரலாம் அதற்கு அதிகம் செலவாகும் என்று அச்சப்பட வேண்டாம் அரசு காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு காப்பீடு திட்டங்கள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp