கோவை: கோவையில் கார் மீது தனியார் பஸ் மோதியதில் ஏற்பட்ட தகராறில் பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் வினோத்(28). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு பஸ் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் கொச்சி – சேலம் பைபாசில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வினோத்துக்கும், காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிஷான்(43) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிஷான் தனது காரில் வைத்திருந்த அரிவாளால் வினோத்தை வெட்டினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அந்த வழியாகச் சென்றவர்கள் வினோத்தை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின் பேரில், அங்கு சென்ற போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷானை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

