கோவை: மேற்கு வங்க தொழிலாளியை அடித்து கொலை ஊர் காவல் படை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் என்பவர் கோவையில் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கரும்புக்கடையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.
அந்நிலையில் கடந்த 28-ம் தேதி வேலை முடிந்து புல்லுக்காடு பகுதியில் தனது நண்பர் ராகேத் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது , அவ்வழியாக வந்த ஆட்டோ சூரஜ் மீது மோதியுள்ளது. அதில் சூரஜ் கீழே விழுந்தார். உடனே அந்த ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் சூரஜ் ஏன் இடித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
அப்போது ஆட்டோவில் இருந்த இருவரும் சூரஜ்ஜை சரமாரியாக அடித்து தாக்கி விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சூரஜை அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சூரஜை தாக்கியது உக்கடத்தை சேர்ந்த ஊர் காவல் படை வீரர் முகமதுபஷீத்கான்(30) மற்றும் அவரது நண்பர் பிரகாஷ்(38) என்பது தெரியவந்தது. இருவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் சூரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து போலிசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றியமைத்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யபட்ட இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

