கோவை: கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் எக்ஸ்போவில் உள்ள விளையாட்டு எந்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் 10 பேர் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில் கேளிக்கை பொழுதுபோக்கு விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்றும் அங்கு பொதுமக்கள் குவிந்தனர். அப்போது பொதுமக்கள் அந்தரத்தில் தொங்கும் விளையாட்டு எந்திரத்தில் ஏறி அமர்ந்தனர்.
அந்த எந்திரம் மேலே சென்றதும் கீழே இறக்க முடியாமல் தடைபட்டு நின்றது. இதனால் அதில் அமர்ந்திருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பீளமேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு தீயணைப்பு வீரர்களால், உயரம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களை மீட்க முடியவில்லை. இதை தொடர்ந்து தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து ஸ்கை லிப்ட வாகனம் வரவழைக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்த 2 குழந்தைகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் கடற்கரை எக்ஸ்போவில் உள்ள விளையாட்டு எந்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் 10 பேர் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டனர்.
இந்த எக்ஸ்போவில் பாதுகாப்பு குறைபாடு அதிகமாக இருப்பதாகவும், அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தக் கூட போதுமான அமைப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

