கோவை: எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை என்னுடைய நண்பர்களை சந்திப்பேன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975- 1979 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ திரையிடப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது.

அதில் பேசியிருந்த நடிகர் ரஜனிகாந்த், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் அனைவரும் சந்தித்துள்ளீர்கள் என்றும், பழைய நண்பர்களை பார்க்கும் பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக மாறியிருக்கிறார்கள் , முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் இங்கு படித்திருக்கிறார்கள் என்றார். என்னுடைய சம்பந்தி வணங்காமுடியும் இங்கு படித்தவர்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு உறவு முறைகளில் உறவினர்கள் இருந்தாலும் , நண்பர்களை பார்க்கும் பொழுது புத்துணர்வு இருக்கும், நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை எனது நண்பர்களை சந்திப்பேன், சிவாஜி என்ற பெயரை நான் மறந்துவிட்டாலும் அவர்கள் அந்த பெயரை அழைத்து கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

