கோவை: கோவை மாநகராட்சி கண்ணப்ப நகர் பகுதியில் பொதுக் கழிப்பிடத்தின் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சி கண்ணப்ப நகர் பகுதியில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஜோதி (43) என்ற பெண் கழிவறைக்கு சென்றுள்ளார் அப்பொழுது குழாயில் தண்ணீர் வராததால் கீழ்தள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுப்பதற்கு முயன்றுள்ளார்.
அப்பொழுது அவர் நிலை தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் ஜோதி வராததால் அவரது வீட்டார் அவரை தேடி உள்ளனர் அப்பொழுது ஜோதி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த இரத்தினபுரி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணித்துறையினர் ஜோதியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொது கழிப்பிடத்தின் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

