கோவை: போத்தனூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைப்பதற்கான பண்கள் தொடங்கியுள்ளன.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக டயாலிசிஸ் மையம் கட்டும் பணியினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த டயாலிசிஸ் மையம் கட்டப்படுகிறது.
பணிகளை விரைவாக மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் டயாலிசிஸ் சென்டர், நெகடிவ் மற்றும் பாசிட்டிவ் டயாலிசிஸ் அறைகள், மருத்துவ அதிகாரி அறை, பணியாளர் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான கழிப்பறைகள், இருப்பு அறை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
இதனால் போத்தனூர், குறிச்சி, கோணவாய்க்கால்பாளையம், ஆத்துப்பாலம், நஞ்சுண்டாபுரம் மற்றும் குறிச்சி பிரிவு போன்ற பகுதிகளிலுள்ள சர்க்கரை நோயாளிகள் பயன்பெறுவார்கள்.

