கோவை: தமிழ்நாட்டில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கோவையின் இரண்டு இடங்களில் Free Wifi வசதி தொடங்கப்பட்டுள்ளது.
கணபதி மற்றும் ராஜவீதி ஆகிய இரண்டு இடங்களில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பிஎஸ்என்எல் வாயிலாக கட்டணமில்லா இணைய வசதியை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இதன் செயல்பாடு குறித்த விளக்கப்படத்தினை ஆட்சியர் பவன் குமாருடன் இணைந்து பார்வையிட்டார்.
இதுகுறித்து கணபதி ராஜ்குமார் கூறியதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சி கணபதி, ராஜவீதி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் வாயிலாக Free Wifi வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக நம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கணபதி, ராஜவீதி பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கட்டணமில்லா இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டம் அரசு கலைக்கல்லூரி, ரயில்நிலையம், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
இந்த இணைய வசதியை ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மொபைல் எண்ணுக்கும் தினமும் 4 மணி நேரம் கட்டணமில்லாமல் இணையம் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த இணையவசதியை ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் ஐ-பேட் மூலம் பெறமுடியும். OTP அடிப்படையிலான அங்கீகாரம் பாதுகாப்பான உள்நுழைவு உறுதிபடுத்தப்படுகிறது.
இந்த சேவையானது பொதுமக்கள், மாணவர்கள், அருகிலுள்ள வணிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் பெரும் பயனளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

