கோவை: சின்னத் தடாகம் அதிக லாபம் தரும் தீபாவளி ஏலச்சீட்டு என்ற பெயரில் தொழிலாளர்களின் பணத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமார். இவர்கள் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தனர்.
இந்த சகோதரர்கள் இருவரும், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களை அணுகி, தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், வாரம் ரூபாய் 2,000 வீதம் 52 வாரங்களுக்கு கட்டினால் நல்ல லாபம் தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதை நம்பி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணம் செலுத்தினர். ஆனால், காலக்கெடு முடிந்த பிறகும் மலைச்சாமி யாருக்கும் முதிர்வு தொகை ரூ.50 லட்சத்தைக் கொடுக்கவில்லை, சகோதரர்கள் இருவரும் பணத்தை கொடுக்காமல் 2016ம் ஆண்டு மதுரைக்குச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த போலீசார் பணத்தைத் திருப்பித்தர 2 ஆண்டுகள் அவகாசம் அளித்தனர்.
ஆனால், பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்தனர். இதனிடையே இருவரையும் கைது செய்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சகோதரர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

