கோவை: பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான மார்ட்டின், தமிழக முழுவதும் பரிச்சயமானவர். தமிழகத்தில் லாட்டரி தடைக்கு முன்னர், அந்த தொழிலில் கொடிகட்டி பறந்த மார்ட்டின் தற்போது பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் பாஜகவில் அங்கம் வகித்து வந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியின் இணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும், அவ்வப்போது சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
லீமா ரோஸ் மார்ட்டின்
இதனிடையே, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் ஐஜேகே சார்பில் தனது ஆதரவாளர்களை களமிறக்க லீமா ரோஸ் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்கு ஐஜேகே மறுத்து தனது குடும்பத்தினருக்கு சீட் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கட்சிக்காக பல கோடிகளை செலவழித்த லீமா ரோஸ் மார்ட்டின், கட்சியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தார். மேலும், ஐஜேகே-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரைச் சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டின் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
இதனிடையே, புதுச்சேரி பாஜகவில் அங்கம் வகித்து வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அக்கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவ்வப்போது புதுச்சேரி பொதுமக்கள் பிரச்சனைகளை பேசி சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். இதனால் புதுச்சேரி மக்களின் ஆதரவுகளையும் பெற்று வருகிறார்.
இவர் ஏற்கனவே தனது மைத்துனர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தனது அரசியல் லாபத்திற்காக என் தந்தையின் பணத்தை செலவழிக்கிறார் ஆதவ் அர்ஜுனா என்று கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

ஆதவ் அர்ஜுனா
மார்ட்டின்-லீமா ரோஸ் தம்பதியின் மருமகனான ஆதவ் அர்ஜுனா முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். கூட்டணி ஆட்சி குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்டிருந்த கருத்து தமிழக அளவில் பேசுபொருளானது. இதனால் கட்சி தலைமையின் அதிருப்தியை சம்பாதித்தார்.
இதனால், விசிக.,வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜயின் தவெக.,வில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரச்சாரப் பிரிவு துணை பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
விஜய் செல்லும் இடங்களுக்கும், அவர் செல்லாத இடங்களுக்கும் செல்லும் ஆதவ் அர்ஜுனா, தவெக.,வுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய்யுடன் சேர்ந்து அதிமுகவையும் எதிர்த்து வரும் நிலையில், தற்போது அவரது மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுகவில் இணைந்துள்ளார்.

மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனிக்கட்சி, மருமகன் ஆதவ் அர்ஜுனா ஒரு கட்சி என்று உள்ள சூழலில், தற்போது லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவுவது போல, மார்ட்டின் குடும்பமும் மும்முனை அரசியலை எதிர்கொள்கிறது.

