கோவை: கோவையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகm அமைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் வ உ சி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யை “அங்கிள் விஜய்” என்று குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆசிரியரின் பாராட்டால் நெகிழ்ந்த ஸ்டாலின்!
பாராட்டு விழாவில் பேசிய ஸ்டாலின், மகிழ்ச்சியும் கூச்சமும் கலந்த மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
உணர்ச்சிப் பெருக்கால் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்பதாகக் குறிப்பிட்ட அவர், மாண்புமிகு ஆசிரியர் பாராட்டுடன் அன்பையும் சேர்த்து வழங்கியிருப்பதாகக் கூறினார்.
“இந்த நிகழ்வு தாய்க்கழகம் வழங்கிய அன்பு முத்தம். இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற ஊக்கமாக இந்த விழாவை எடுத்துக்கொள்கிறேன். மேலும் பல சாதனைகளைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆசிரியர் கி.வீரமணியுடனான தனது உறவு குறித்துப் பேசிய அவர், பெரியார் கொள்கைகளை மலைபோல் காத்து வருபவர் ஆசிரியர் என்றும், மிசா சிறைவாசத்தின்போது தன்னையும் பாதுகாத்தவர் அவர்தான் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை முறியடித்து வருவதிலும் ஆசிரியரின் பங்கு முக்கியமானது என்றார்.
“நீங்கள் என் மீது வைத்திருக்கும் அதே பாசத்தை நானும் உங்கள் மீது வைத்திருக்கிறேன். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞரின் மகனாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” என்று குறிப்பிட்டார்.
99 சதவீதம் நிறைவடைந்த பெரியார் அறிவுலகம்!
பெரியார் அறிவுலகம் உருவாக்கப்பட்ட பின்னணியை விளக்கிய ஸ்டாலின், இதற்காக அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் ஆய்வுகளையும் நடத்தியதாகக் கூறினார்.
கட்டுமானப் பணிகள் 99 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்திருந்ததாகவும், பத்து முறைக்கும் மேல் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்திருப்பார் என்றும் தெரிவித்தார்.
கட்டிடத்தின் முகப்பு எப்படி இருக்க வேண்டும், அங்கு பெரியாரின் சிலை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் தாம் ஆலோசனைகளை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
கோவைக்கு முதலமைச்சராக இருந்தபோது அதிக முறை வந்துள்ளதாகக் கூறிய அவர், ஜி.டி.நாயுடு தொடர்பான திட்டங்கள், சுப்பிரமணியம் மேம்பாலம், செம்மொழிப் பூங்கா, பெரியார் அறிவுலகம் ஆகியவை கோவையில் தாம் மேற்கொண்ட மறக்க முடியாத சாதனைகள் என்று தெரிவித்தார்.
நூலகங்கள் மூலம் அறிவுப் புரட்சியை உருவாக்க வேண்டும்!
தமிழகத்தில் நூலகங்கள் அமைப்பதற்கு திமுக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வந்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகமும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
புத்தகங்களை அடைத்து வைக்கும் இடமாக இல்லாமல், நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் அறிவு மையங்களாக நூலகங்கள் இருக்க வேண்டும் என்றார்.
திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரிலும், திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், சேலத்தில் பாரதிதாசன் பெயரிலும் நூலகங்கள் அமைக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இவற்றின் பணிகளை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெரியார் அறிவுலகம் திறப்பு குறித்து ஜோதிடர் விமர்சனம்!
பெரியார் அறிவுலகத்தின் திறப்பு விழா குறித்துப் பேசிய ஸ்டாலின், தற்போதைய அரசு ஜோதிடர் குறிப்பிட்ட தேதியில்தான் திறப்பு விழாவை நடத்தியதாக விமர்சித்தார்.
முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், அலுவலகத்திற்கு எப்போது செல்ல வேண்டும், எங்கு அமர வேண்டும் என்பதைக்கூட ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கும் நிலை இருப்பதாகக் கிண்டல் செய்தார்.
முதலமைச்சரை முன்னிறுத்தி பல்வேறு அதிகார மையங்கள் செயல்படும் ஆட்சியாக தவெக அரசு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
“அங்கிள் விஜய்” – ஸ்டாலினின் நேரடித் தாக்குதல்!

தனது உரையில் முதலமைச்சர் விஜய்யை மீண்டும் மீண்டும் விமர்சித்த ஸ்டாலின், “அங்கிள் விஜய்” என்று குறிப்பிட்டுப் பேசியது கவனத்தைப் பெற்றது.
“கோட் சூட் போடுகிறார், வேட்டி சட்டை அணிகிறார். ஜோதிடர் சொன்னபடி பரிகார பூஜை நடத்துகிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகம் செல்கிறார். அங்கிள் விஜய்… இது சினிமா சூட்டிங் கிடையாது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வேண்டும்” என்ற தொனியில் விமர்சித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் முதலமைச்சர் தவிர்ப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், “பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்து ஓடுகிறார் அங்கிள் விஜய்” என்று கடுமையாகச் சாடினார்.
முக்கியமான பிரச்சினைகளுக்கு உடனடியாக விளக்கம் அளிப்பதில்லை என்றும், இடைத்தேர்தல் போன்ற அரசியல் சூழ்நிலைகள் வரும்போதுதான் பொதுக்கூட்டங்களில் பேசுவதாகவும் விமர்சித்தார்.
மின்வெட்டு முதல் கொலைச் சம்பவங்கள் வரை!
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணைக் குடியரசுத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டார்.
அந்தச் சம்பவத்துக்குப் பொறியாளர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், மின்சார விநியோகத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், கோவையில் மட்டும் பத்து கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.
கோவை கொலை நகரமாக மாறி வருவதாக அவர் விமர்சித்தார்.
போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக நிர்வாகிகள் சிலர் போதைப்பொருள் விவகாரங்களில் சிக்குவதாகவும், மெத்தம்பெட்டமைன் வைத்திருந்ததாக தவெக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி!
தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் அதிகரிப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தவெகவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கையாள தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
பெண் நிர்வாகிகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் புகார்கள் எழுவதாகவும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி வருவதாகவும் கூறினார்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக திமுகவினரின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சிறைகளிலிருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவங்கள்!
குற்றவாளிகளைப் பிடிப்பதில் மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் கண்காணிப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு 17 கைதிகள் தப்பியதாகவும், சென்னை புழல் சிறையில் இரண்டு கைதிகள் சுவர் ஏறித் தப்பியதாகவும் குறிப்பிட்டார்.
கோவையில் சிறையிலிருந்து தப்பிய கைதியை மீண்டும் தப்பிக்க விட்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
சிறைச்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பின்னடைவு – ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருந்த தமிழகம் தற்போது ஐந்தாவது இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டிய இலக்குகளை ஐந்து மாதங்களிலேயே எட்டிவிட்டதாக ஆளும் தரப்பினர் கூறுவதாகவும், ஆனால் நடைமுறையில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
மின்கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஒரு கொத்து கொத்தமல்லி கூட ரூ.30-க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விலைவாசி உயர்வின் தாக்கத்தை எடுத்துரைத்தார்.
“மக்களின் கண்ணீர் இந்த ஆட்சியை முடித்துவிடும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அஜித்குமார் லாக்-அப் மரணத்தைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின்!
திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அஜித்குமார் லாக்-அப் மரணச் சம்பவத்தையும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
அந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவரின் தாயாரிடம் தாம் மன்னிப்புக் கேட்டதாகக் கூறிய அவர், தற்போதைய முதலமைச்சர் ஆட்சியில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
தவெக நிர்வாகி ஒருவர் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட விவகாரத்திலும் முதலமைச்சர் மௌனம் காப்பதாக விமர்சித்தார்.
“தவெக ஆட்சி ரெட் அலர்ட்டில் இருக்கிறது!”
இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவெகவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், தற்போது அந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
சமூக வலைதளங்களில் ஆன்லைன் ஆதரவாளர்கள் மற்றும் விஷமிகள் மூலம் உருவாக்கப்படும் போலியான பிம்பத்தால் ஒருமுறை வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அதே உத்தியை வைத்து மீண்டும் வெற்றி பெற முடியாது என்ற தொனியில் பேசினார்.
ஆளும் கட்சியினர் போலி வீடியோக்கள் மூலம் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயற்சிப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்றும் தெரிவித்தார்.
“தலைப்புச் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தற்போதைய தவெக ஆட்சி ரெட் அலர்ட் நிலையில் இருப்பதாகவும், இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் நல்லது என்றும் தனது உரையில் தெரிவித்தார்.
பெரியார் அறிவுலகம் இளைஞர்களுக்கான அறிவுக் கோயில்!
அரசியல் விமர்சனங்களுக்கு மத்தியில் பெரியார் அறிவுலகத்தின் முக்கியத்துவத்தையும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இளைஞர்களும் மாணவர்களும் பெரியார் அறிவுலகத்திற்குச் சென்று திராவிட இயக்கத்தின் வரலாறு, பெரியாரின் கொள்கைகள், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த அறிவுலகம் பொதுமக்கள் பயன்படுத்தும் அறிவு மையமாக வளர வேண்டும் என்றும், இதுபோன்ற நூலகங்கள் தமிழகம் முழுவதும் அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.






