கோவை: பட்டா கிடைக்காததால் அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பான சூழல் நிலவியது.
பட்டா கேட்டு ஐந்து வருடங்களாக மனு அளித்து வந்த முதியவர் இன்று திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரளி விதையை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி பட்டணம் கிராமம் பகுதியை சேர்ந்த 65 வயதான சண்முகசுந்தரம் என்ற முதியவர் அவரது இடத்திற்கு சர்வே செய்து பட்டா வழங்கும் படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்துள்ளார்.
பலமுறை பட்டாவிற்கு விண்ணப்பித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பட்டா கேட்டு மனு அளிக்க வந்த அவர் திடீரென அரைத்து வைத்திருந்த அரளி விதையை குடித்து தற்கொலை முயற்சிக்கு முயன்றுள்ளார்.
இதனை அடுத்து அவர் சற்று மயங்கிய நிலைக்கு சென்ற நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை நாற்காலியில் அமர வைத்து ஆசுவாசபடுத்தி கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.





