கோவை: கோவையில் பசுமாட்டை தாக்க முயன்ற காட்டுயானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் காட்டு யானையை அடர்வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சோமயனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டுயானை தனியார் ஹோட்டல் கடை சட்டரை தட்டி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் அந்த காட்டு யானை திருவள்ளுவர் நகர், குன்று பெருமாள் கோவில் பகுதிகளில் நேற்று இரவு சுற்றி திரிந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றிதிருந்த காட்டு யானை அங்கிருந்த பசுமாடு ஒன்றை தாக்க முற்பட்டது ஆனால் நல்வாய்ப்பாக தாக்காமல் விட்டு சென்றது.
பின்னர் திருவள்ளூர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்த அந்த காட்டு யானையை ஊர்மக்கள் மட்டும் வனத்துறையினர் சத்தங்கள் எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கடந்த சில தினங்களாகவே அந்த ஒற்றை காட்டுயானை குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதால் வனத்துறையினர் அந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கும் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





