கோவை: கோவையில் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டு, பின்னர் கோவை வந்தடைந்தது.
கோவையில் மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் நடுவானில் பலமுறை வட்டமடித்த பின்னர் மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணியளவில் 158 பயணிகளுடன் இண்டிகோ விமானம் கோவை நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் பிற்பகல் 3.02 மணியளவில் கோவை விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான வான்பகுதியில் மோசமான வானிலை நிலவியதால், விமானத்தை கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை வான்பகுதியில் விமானம் சுமார் 4 முதல் 5 முறை வட்டமடித்து, வானிலை சீராகும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வானிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால் விமானத்தை கோவையில் தரையிறக்க முடியவில்லை.
இதனால், விமானம் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. மதுரையில் விமானம் தரையிறங்கிய பின்னர், அதில் எரிபொருள் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, மீண்டும் மதுரையில் இருந்து கோவை நோக்கி விமானம் புறப்பட்டு, பின்னர் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் அமைச்சர் வன்னியரசு, 2 குழந்தைகள் உள்ளிட்ட 158 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை செல்ல வேண்டிய பயணிகள், மோசமான வானிலை காரணமாக முதலில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் கோவை நோக்கி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், வழக்கமான பயண நேரத்தைவிட சுமார் 3 மணி நேரம் தாமதமாக கோவை வந்து சேரும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேர பயணத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டு, பின்னர் மீண்டும் கோவை வந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





