கோவை: கோவை சூலூரில் செயினை பறித்துக் கொண்டு தப்பு முயன்றதாக கூறி ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த காந்திநகர் பகுதியில், மளிகைக் கடையில் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றதாக நபரைப் பிடித்த பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், சூலூர் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூலூரில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காந்திநகர் பகுதியில் உள்ள மனோஜ் என்பவரின் மளிகைக் கடைக்கு மணிகண்டன் மது மற்றும் கஞ்சா போதையில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கடையில் இருந்த பெண்ணின் செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதனால் அந்த பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு மணிகண்டனை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது பொதுமக்களுடன் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணிகண்டனை பிடித்து சரமாரியாக தாக்கியதுடன், பின்னர் சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது போலீசார் முன்னிலையிலேயே மணிகண்டன் கஞ்சா பயன்படுத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு தனது நண்பரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்த இவர், பின்னர் உடலை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று வீசிய வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
செயினை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து, பொது இடத்தில் வைத்து தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.





