கோவை: கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக 228 இடங்களில் 490 காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 228 இடங்களில் 72 தனிப்படைகளைச் சேர்ந்த சுமார் 490 காவலர்கள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி உத்தரவின்பேரில், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை தொடங்கிய இந்தச் சோதனையில், கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பாளையம், செட்டிபாளையம் பகுதிகளில் 132 இடங்களிலும், பேரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை, கே.ஜி. சாவடி பகுதிகளில் 96 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேடப்படும் நபர்கள், ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தந்த உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.






