கோவை: கோவை மாதம்பட்டி பகுதியில் அடுத்தடுத்த கடைகளின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர், பணம் மற்றும் மின்சார ஒயர்களைத் திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குறித்து பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி பகுதியில் உள்ள அரிசிக் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் அருகில் இருந்த எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்துள்ளார்.
அங்கு தனது கையில் வைத்திருந்த கருவிகளைப் பயன்படுத்தி கல்லா பெட்டியைத் திறந்து, அதில் இருந்த பணத்தைத் திருடியுள்ளார். தொடர்ந்து, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிவிசி மின்சார ஒயர்களில் 18 காயில்களைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளார். இதற்காகக் கையில் வைத்திருந்த கத்தரிக்கோலைப் பயன்படுத்தி ஒயர்களை அறுத்துத் தயார்படுத்தியுள்ளார்.
மேலும், கடையில் ஆணிகள் வைக்கப்பட்டிருந்த சாக்குப் பையை கிழித்து, அதிலிருந்த ஆணிகளைக் கடைக்குள்ளேயே கொட்டியுள்ளார். பின்னர் திருடிய பொருட்களைப் பையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கடை உரிமையாளர் தரப்பில் காலை 10 மணியளவில் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மணி நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தவில்லை எனக் கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
Video
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி கூறுகையில், “போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பிறகுதான் கடையைத் திறந்து வழக்கமான வியாபாரத்தைத் தொடர முடியும். ஆனால், அவர்கள் வராததால் எங்களது அன்றாட வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி பகுதியில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும், புகார் அளித்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






