கோவை: நவராத்திரியை முன்னிட்டு கோவையில் தெய்வங்களாக மாறிய மழலைகள் கொலு பொம்மைகளாய் அணிவகுத்தனர்.
நவராத்திரி பண்டிகையையொட்டி, கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு, கொலு பொம்மைகளைப் போன்று அணிவகுத்து நின்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நவராத்திரி பண்டிகையின்போது வீடுகளில் கொலு வைத்து, அம்மனை வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு, வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சுமார் மூன்று வயதே நிரம்பிய மழலைக் குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து பங்கேற்றனர். பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொலுவின் முன்பு நடைபெற்ற சிறப்புப் பூஜையிலும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகள் வேடமணிந்திருந்தனர்.
மேலும், ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளின் வேடங்களிலும் குழந்தைகள் காட்சியளித்தனர்.
இதுதவிர, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என தசாவதார வேடங்களும் இடம்பெற்றன. சிவன், பார்வதி, விநாயகர், முருகன் அடங்கிய சிவன் குடும்பம், ராமர் பட்டாபிஷேகம், விஷ்ணு – லட்சுமி, பிரம்மா – சரஸ்வதி, வெங்கடாஜலபதி – பத்மாவதி ஆகிய தெய்வத் தம்பதியர் வேடங்களும் விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

முப்பெரும் தேவியர், மதுரை மீனாட்சி அம்மன், கருமாரியம்மன், பழனி முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடங்களில் குழந்தைகள் தத்ரூபமாகக் காட்சியளித்தனர்.
வண்ணமயமான ஆடைகள், கிரீடங்கள், அணிகலன்களுடன் கொலு பொம்மைகளைப் போல வரிசையாக அமர்ந்தும் நின்றும் காட்சியளித்த மழலைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இதுகுறித்து பள்ளியின் தாளாளர் சவுந்தர்யா கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தெய்வ வேடமிட்டு நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி இந்த நிகழ்வில் பங்கேற்று, பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மழலைக் குழந்தைகள் பல்வேறு தெய்வங்களாகவும், புராணக் கதாபாத்திரங்களாகவும் வேடமிட்டு கொலு பொம்மைகளைப் போன்று அணிவகுத்த நிகழ்வு, நவராத்திரி விழாவின் ஆன்மிகச் சிறப்பையும் குழந்தைகளின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியது.






