கோவை : கோவை பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் பகுதிகளில் அறை எடுத்து தங்கிப் படிக்கும் மாணவர்களின் அறைகளில் செல்போன்கள், மடிக்கணினிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் பயிலும் மாணவர் தங்கியிருந்த அறையில் இருந்து 4 செல்போன்கள், ஒரு மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் ஹரிகிருஷ்ணா என்பவர் பயின்று வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து, தனது நான்கு நண்பர்களுடன் கடந்த ஓராண்டாகத் தங்கி வருகிறார்.
இந்நிலையில், மாணவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து நான்கு செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி திருடப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், விடுதி உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அதிகாலை 6.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் எவ்வித பதற்றமும் இன்றி அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், மற்றொரு பகுதியில் உள்ள அறையிலும் செல்போன்கள் திருடப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தனது அறையில் இருந்து நான்கு செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஹரிகிருஷ்ணா சிசிடிவி காட்சிகளுடன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருட்டில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்து, இழந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வி பயில்வதற்கு மடிக்கணினி மற்றும் செல்போன்கள் அத்தியாவசியமாக இருப்பதால், அவற்றை இழந்தது தங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருட்டில் ஈடுபட்ட நபரை விரைவாகக் கண்டுபிடித்து பொருட்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கோவையில் அறை எடுத்து தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






