கோவை : கணவர் இறந்த துக்கத்தில் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண், கோவை துடியலூரில் காரின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதில் பலத்த காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிந்து (55). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதீப் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் பிந்து மனரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும், தூக்கமின்றி அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பிந்துவின் மகள் திரிஷ்யா கடந்த 10-ம் தேதி தனது தாயாரை மனநல சிகிச்சைக்காக கோவை வடகோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பின்னர் இருவரும் துடியலூர் என்ஜிஜிஓ காலனியில் உள்ள ஓட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றனர்.
அப்போது, ஓட்டல் முன்புள்ள சாலையில் சென்ற காரின் முன் பிந்து திடீரென பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காரின் முன்சக்கரம் அவர் மீது ஏறியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிந்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






