திருமண தோஷ பரிகாரம் செய்வதாகக் கூறி பெண் இன்ஜினீயரிடம் பாலியல் அத்துமீறல்? கோவை ஜோதிடர் மீது புகார்


கோவை: திருமண தோஷ பரிகாரம் செய்வதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவை ஜோதிடர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், தாம்பரத்தில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பெற்றோரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தனது தோழியின் அறிவுறுத்தலின்பேரில் யூடியூப் மூலம் ஜோதிடப் பலன்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

Advertisement

அப்போது, கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதி காலனியைச் சேர்ந்த ஜோதிடர் கார்த்திகேயன் (35) என்பவருடன் வாட்ஸ்அப் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் தந்தையின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறிய கார்த்திகேயன், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்களில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் பெண்ணின் வீட்டிலேயே சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருமண தோஷத்துக்குப் பரிகாரம் செய்வதாகக் கூறி அந்தப் பெண்ணை மட்டும் தனியாக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய கார்த்திகேயன், அந்தப் பெண்ணிடம் காதலைத் தெரிவித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.

Advertisement

அதன்பிறகும், குடும்பத்தில் அமைதி திரும்பியதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் கார்த்திகேயன் தொடர்ந்து பேசி வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கோவை மேட்டுப்பாளையம், சென்னை மெரினா கடற்கரை அருகே மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் விடுதிகளுக்கு அந்தப் பெண்ணை வரவழைத்துள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சில மாதங்களுக்குப் பிறகு கார்த்திகேயன் தனது தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண், சமூக வலைதளங்களில் தேடியபோது, திருப்பூரைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமும் இதேபோல் திருமண பரிகாரம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகப் புகார் எழுந்திருப்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திகேயனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருப்பதும் தெரியவந்ததாகக் கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து கார்த்திகேயனிடம் கேட்டபோது, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை தனக்குத் தெரியும் என்றும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளலாம் என்றும் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜோதிட நம்பிக்கையைப் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய அந்தப் பெண், கார்த்திகேயன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை மேற்கு தாம்பரம் இணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...