கோவை: பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்க கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, விமான நிலையம் முதல் காந்திபுரம் வரையிலும் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை இன்று முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இதற்காக கோவை வந்தடைந்த அவர், விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், வாகனத்தில் இருந்தபடியே கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவருக்குப் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர். சிலர் வேல் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் வழங்கினர். அவற்றை அன்புடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.
இதற்கிடையே, விமான நிலையம் முதல் காந்திபுரம் வரையிலான முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.






