கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சிறைத்துறைக்குச் சொந்தமான 6.98 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் அறிவுலகம்.
புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம், நவீன தொழில்நுட்ப வசதிகள், அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம், கோளரங்கம் எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் நுழைவுப் பகுதியில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு தளங்களைக் கொண்ட இந்த நூலகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி புத்தகங்கள், கணினி வசதிகள், சர்வதேச மின் நூல்கள், நவீன அரங்கம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
இந்த அறிவுலகத்தில் ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன வசதிகள் உள்ளன? யாருக்கெல்லாம் இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும்? என்பதைப் பார்ப்போம்.
தரைத்தளம் – மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம்!
தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் வாசிப்பதற்கான பிரெய்லி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நவீன ஆடிட்டோரியம், அறிவியல் மையம் மற்றும் ஸ்பேஸ் லிப்ட் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் தளம் – வரவேற்பறை, அறிவியல் மையம்!
முதல் தளத்தில் நூலகத்திற்கு வரும் வாசகர்களை வரவேற்கும் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையம் அமைந்துள்ளன. அறிவியல் சார்ந்த விஷயங்களைப் புத்தகங்கள் மூலம் மட்டுமின்றி, நேரடியாகப் பார்த்து புரிந்துகொள்ளும் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க உதவும்.

இரண்டாவது தளம் – குழந்தைகள் நூலகம்!
குழந்தைகளிடம் சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில் இரண்டாவது தளத்தில் குழந்தைகள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், வாசகர்கள் அமைதியாக அமர்ந்து புத்தகங்களைப் படிப்பதற்கான சுய வாசிப்புப் பிரிவும் இடம்பெற்றுள்ளது. பாடப் புத்தகங்களைத் தாண்டி கதைகள், அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த நூல்களை வாசிக்கவும் இந்தப் பிரிவு உதவியாக இருக்கும்.

மூன்றாவது தளம் – போட்டித் தேர்வுகளுக்கான நூலகம்!
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மூன்றாவது தளத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களைப் படித்து தயாராகும் வகையில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டில் அமைதியாகப் படிக்க இடவசதி இல்லாத மாணவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து படிக்க விரும்பும் இளைஞர்களுக்கும் இது உதவக்கூடும். மேலும், தலைமை நூலகர் அலுவலகமும் இங்கு அமைந்துள்ளது.

நான்காவது தளம் – வரலாறு, தமிழ் நூல்கள்!
நான்காவது தளத்தில் வரலாற்றுப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு தொடர்பான நூல்களை வாசிக்க விரும்புவோருக்காகத் தமிழ் நூல்கள் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், பல்வேறு தலைப்புகளில் வெளியாகும் பருவ இதழ்களை வாசிப்பதற்கான பிரிவும் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடி அறிந்துகொள்ள இந்தப் பிரிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்கள் – ஆங்கில நூலகம்!
ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்களில் ஆங்கில நூலகம் செயல்பட உள்ளது. ஆங்கில மொழியில் வாசிக்கும் திறனை மேம்படுத்த விரும்புவோருக்கும், பல்வேறு துறைகள் தொடர்பான நூல்களைப் படிக்க விரும்புவோருக்கும் இந்தப் பிரிவு உதவும். மேலும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டரும் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்கும் பிரிவும் இடம்பெற்றுள்ளதால், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்கள் தங்களது மொழித் திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஏழாவது தளம் – டிஜிட்டல் நூலகம், விண்வெளிக் கோளரங்கம்!
ஏழாவது தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் மற்றும் விண்வெளிக் கோளரங்கம் ஆகியவை இடம்பெற உள்ளன. டிஜிட்டல் வசதிகள் மூலம் மின் நூல்களை அணுகவும், கணினிகளைப் பயன்படுத்தி தகவல்களைத் தேடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளிக் கோளரங்கத்தில் விண்வெளி தொடர்பான காட்சிகளைக் கண்டு ரசிக்க முடியும். குறிப்பாக, கோள்கள், விண்மீன்கள் மற்றும் பிரபஞ்சம் குறித்த அறிவியல் ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்க்க இந்த வசதி உதவும்.

பெரியார் அறிவுலகத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
- 1 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள்
- மொத்தம் 7 தளங்களுடன் பிரமாண்ட நூலகக் கட்டமைப்பு
- குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவுகள்
- போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கான நூலகம்
- தமிழ், வரலாறு மற்றும் ஆங்கில நூல்களுக்கான பிரிவுகள்
- டிஜிட்டல் நூலகம் மற்றும் சர்வதேச மின் நூல்கள்
- அறிவியல் மையம் மற்றும் விண்வெளிக் கோளரங்கம்
- ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர்
- ஆங்கிலம் கற்கும் பிரிவு மற்றும் நவீன ஆடிட்டோரியம்
- ஆசியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் ஸ்பேஸ் லிப்ட் வசதி
- மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை… யாருக்குப் பயன்?பெரியார் அறிவுலகம் புத்தகங்களை வாசிப்பதற்கான இடமாக மட்டுமின்றி, பல்வேறு வயதினரும் தங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள உதவும் மையமாகவும் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது முதல், இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது, ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவது, தொழில்முனைவோர் புதிய முயற்சிகளைத் தொடங்குவது, அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்வது வரை பல்வேறு தேவைகளுக்கு இது பயன்படக்கூடும்.






