கோவை: மழையில் குடையை பிடித்து கொண்டே கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்து திரும்பினார் தமிழக முதல்வர் விஜய்.
கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்துவிட்டு விமான நிலையம் திரும்பிய முதலமைச்சர் விஜய், மழையையும் பொருட்படுத்தாமல் வாகனத்தின் மீது குடை பிடித்தபடி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துச் சென்றார்.
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, காந்திபுரம், பீளமேடு, அண்ணா சிலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்திற்குப் புறப்பட்டார். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால், வாகனத்தின் மீது குடை பிடித்தபடியே சாலையோரங்களில் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்து நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே, கோவை விமான நிலையப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிலர் குடை பிடித்தபடியும், மழைக்கு ஒதுங்கியபடியும் காத்திருந்தனர்.
தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது மழை நின்றது. பெரியார் அறிவுலகத் திறப்பு விழாவை முன்னிட்டு கோவையில் மக்கள் திரண்டிருந்த நிலையில், மழையிலும் குடை பிடித்தபடி முதலமைச்சர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துச் சென்றது கவனம் ஈர்த்தது.






