கோவை; கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையை கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பவன் குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வாக்குச்சாவடிகளைத் திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை நவம்பர் 2-ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பான விண்ணப்பங்களை நவம்பர் 12-ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை பொதுமக்கள் அளிக்கலாம்.
பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐயும், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6A-ஐயும் பயன்படுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்குப் படிவம் 6B பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான ஆட்சேபனைகள், பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு படிவம் 7-ஐயும், முகவரி மாற்றம், விவரத் திருத்தம் மற்றும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் உள்ளிட்ட தேவைகளுக்கு படிவம் 8-ஐயும் பயன்படுத்தலாம்.
பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் அளிக்கலாம். மேலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் இருப்பிட முகவரி மற்றும் வயதுக்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in இணையதளம் மற்றும் ECINET கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராக இருக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.






