கோவை: கோவையில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவான நிலையில், விடிய விடிய அதிகாரிகளும், ஊழியர்களும் பணியாற்றி கோவையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கோவையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி, நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாநகரின் முக்கியப் பகுதிகளில் நள்ளிரவில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளிலும், முக்கியச் சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.
வழக்கமாக பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் மழைநீர் தேங்கினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களைச் சந்திப்பது வழக்கம். சில நேரங்களில் மழை பெய்த மறுநாள் காலையிலும் தண்ணீர் வடியாமல் இருப்பதால், அந்த வழியாகச் செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆனால், இந்த நிலையை மாற்றியுள்ளனர் கோவை அதிகாரிகள்.
நேற்று விடிய விடிய மழை பெய்த நிலையில், லங்கா கார்னர், அவினாசி சாலை, நல்லாம்பாளையம், கிக்கானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே பாலங்களின் கீழ்ப்பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.
விடிய விடிய களப்பணி
இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் துறை அதிகாரிகள் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, வெவ்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணியாளர்களும் இரவு நேரத்திலும் தொடர்ந்து பணியாற்றி மழைநீரை அகற்றினர். தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மாநகரப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, இன்று காலை கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் ஏற்படும் போக்குவரத்துப் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. வழக்கமாக கனமழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்குச் சிரமம் ஏற்படும் இடங்களிலும் போக்குவரத்து சீராக இருந்ததாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பொதுமக்கள் பாராட்டு
மழை பெய்தால் மட்டுமல்லாமல், மழைநீரை விரைவாக அகற்றி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுப்பதும் முக்கியம் என்பதை அதிகாரிகளின் இந்தப் பணி எடுத்துக்காட்டுவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்றுதல், குடியிருப்புப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 750 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மழைநீரை வெளியேற்றுவதற்காக 9 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 10 மோட்டார் பம்புகள், 9 நீர்மூழ்கி மோட்டார்கள், 10 ஜெனரேட்டர்கள், 16 ஜே.சி.பி. இயந்திரங்கள், 7 பொக்லைன் இயந்திரங்கள், 7 பாப்கேட் இயந்திரங்கள், 25 டிப்பர் லாரிகள் மற்றும் 20 குடிநீர் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மரங்களை அகற்றும் இயந்திரங்கள், கொசு மருந்து தெளிக்கும் வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசரகாலப் பணிகளுக்காக மண்டல உதவி ஆணையர்கள் தலைமையில் ஏழு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு பகலாகப் பணியாற்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்த அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.






