நீலகிரி: “மழை நீரோடு மண் வந்து பஸ்ஸை அமுக்கியது” என விபத்தின் பயங்கரத்தை விவரித்த அவர், ஆபத்தை உணர்ந்து 7 பயணிகளையும் முன்கூட்டியே இறக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குன்னூரில் இருந்து கோவைக்கு நள்ளிரவில் இயக்கப்பட்ட அந்த அரசுப் பேருந்தில் 7 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மலைப்பாதையில் கனமழை பெய்து வந்த நிலையில், நிலைமை ஆபத்தானதாக இருப்பதை ஓட்டுநர் ஜனகராஜும், நடத்துநர் கேசவனும் உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து, பர்லியார் பகுதியில் பேருந்தை நிறுத்தி, அதிலிருந்த 7 பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பயணிகள் இறங்கிய பின்னர், பேருந்தில் ஓட்டுநர் ஜனகராஜும், நடத்துநர் கேசவனும் மட்டுமே இருந்துள்ளனர். தொடர்ந்து மேட்டுப்பாளையம் நோக்கிப் பேருந்தை இயக்கியபோது, பர்லியார் அருகே மலைப்பாதையில் இரண்டு இடங்களில் பெரிய மரங்கள் முறிந்து விழுந்து பாதையை மறித்துள்ளன.
இதனால் பேருந்தைத் தொடர்ந்து இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த ஓட்டுநர் ஜனகராஜ், பேருந்தை பின்னோக்கி இயக்கி பாதுகாப்பான இடத்தில் நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, மலையில் இருந்து மழைநீருடன் மண் பெருக்கெடுத்து வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் அரசுப் பேருந்து சிக்கி மண்ணுக்குள் புதைந்தது.
Video
இந்த விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய நடத்துநர் கேசவன், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டார். காயமடைந்த அவர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் கேசவன், விபத்தின் போது நேர்ந்த பயங்கர அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார். மழைநீருடன் மண் பெருக்கெடுத்து வந்து பேருந்தை அமுக்கியதாகவும், ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து 7 பயணிகளையும் இறக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.






