கோவை: கோவையில் நாளை (அக்டோபர் 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற பெயரில் தனியார் செய்தி சேனல் பெயரில் போலி நியூஸ் கார்டு பரவி வருகிறது.
கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பலரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மேலும், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததுடன், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள், அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே, ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால், அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றும் தண்ணீரில் சிக்கியது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள சூழலில், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனியார் செய்தி சேனலின் பெயரில் போலி நியூஸ் கார்டு தயாரித்து, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எனத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
செய்தி நிறுவனத்தின் பெயர் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி நியூஸ் கார்டுகளைப் பார்த்தவுடன் உண்மை என நம்பி மற்றவர்களுக்கும் பகிர்வது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக வரும் தகவல்களை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே நம்ப வேண்டும். உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதே நேரத்தில், கோவையில் நிலவும் மழை பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுமா அல்லது விடுமுறை அறிவிக்கப்படுமா என்பதை மாவட்ட நிர்வாகம் விரைவாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை போலி நியூஸ் கார்டுகளை நம்ப வேண்டாம் என்பதே முக்கியமான வேண்டுகோளாகும்.






