கோவை: கோவையில் தொடர் கனமழை காரணமாக உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.
உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வீட்டில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
VIDEO
தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலும் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






