அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்கே அருகதை இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் நிர்மல்குமார் கடும் தாக்கு…

கோவை: எம்.ஜி.ஆர். உருவாக்கிய தலைமை அலுவலகத்திற்குள் செல்வதற்கோ, அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்கோ எந்தத் தார்மீக அருகதையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

கோவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் சூரிய மேற்கூரை திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.

Advertisement

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி கூட்டரங்கில் சூரிய மேற்கூரை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

அதைத் தொடர்ந்து, மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

Advertisement

சூரிய மேற்கூரை திட்டத்தில் முன்பு எங்கு விண்ணப்பிப்பது என்ற குழப்பம், மானியம் பெறுவதில் தாமதம் மற்றும் நெட் மீட்டர் பொருத்துவதில் 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஏற்பட்ட காலதாமதம் போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

இதனால் திட்டம் வேகம் எடுக்காமல் இருந்தது. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க ஒற்றைச் சாளர இணையதள முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றிய அரசின் திட்டத்தையும் இணைத்து ஒரே இடத்தில் விண்ணப்பிக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 1,500 பதிவு செய்யப்பட்ட முகவர்களில் ஒருவருக்குத் தானாகவே பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதளம் தொடங்கப்பட்ட கடந்த 3 வாரங்களில் மட்டும் நேற்று வரை 30,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் வீடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மக்களின் பெரும் வரவேற்பால் வரும் ஜனவரி மாதத்திற்குள்ளாகவே இந்த இலக்கு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

முன்பு கோவையில் விண்ணப்பங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சென்னையில் அதிகரித்துள்ளது. இதில் குறு, சிறு தொழில் முனைவோரும் அதிகளவில் பங்கேற்கலாம்.

முகவர்களின் கோரிக்கைகளை ஏற்று அனைத்துப் பணிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் மானியம் கிடைத்த பிறகு, தமிழக அரசின் மானியமும் பயனாளிகளுக்கு 2 நாள்களுக்குள் கிடைக்கும் வகையில் நிதித்துறையுடன் இணைந்து பணிகள் எளிமைப்படுத்தப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுதவிர, பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த கோடைகால மின்தேவையை எதிர்கொள்ள முன்கூட்டியே விரிவான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கான நடுத்தர ஒப்பந்தம் மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்தபட்சம் 8,000 மெகாவாட் மின்சாரத்தைக் கூடுதலாகக் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வரும் 2028-2029-க்குள் தற்போதுள்ள ஒப்பந்தங்கள் முடிவடைவதையும் கணக்கில் கொண்டு இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

உபரி சூரிய மின்னாற்றலை முறைப்படுத்த விரைவில் பேட்டரி சேமிப்புக் கொள்கை கொண்டுவரப்பட உள்ளது.

எம்.எஸ்.எம்.இ மற்றும் பெருந்தொழில்களின் மின்கட்டணக் கோரிக்கைகள் கட்டம் கட்டமாக ஆய்வு செய்யப்படும்.
உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் 5 முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, புதிய இணைப்புகளை விரைந்து வழங்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதற்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

எடப்பாடி பழனிசாமி என் மீதான விமர்சனங்களை விடுத்து, தனது சொந்தக் கட்சிப் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவா அல்லது யாருடைய அதிமுக என்றே தெரியவில்லை.

அவர் திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக அவரது கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களே கூறுகின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமிக்கு, எம்.ஜி.ஆர். உருவாக்கிய தலைமை அலுவலகத்திற்குள் செல்வதற்கோ, அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்கோ எந்தத் தார்மீக அருகதையும் இல்லை. அவர் செய்வது வெறும் நாடகம். திமுகவின் தவறுகளுக்கு எதிராக நிற்காமல், திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வரும் அவர், அதிமுகவை ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளிடம் ஒப்படைத்துவிட்டு நேரடியாக திமுகவிலேயே இணைந்துவிடலாம்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கு முதல்வரை, எடப்பாடி பழனிசாமி பாராட்டியிருக்க வேண்டும். மாறாக திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கிறார்.

முதலமைச்சர் சிறைத்துறை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி என அனைத்துத் துறைகளிலும் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது கூவத்தூரில் ஒப்பந்த அடிப்படையில் பதவிக்கு வந்து வெல்ல மண்டி வியாபாரம் போல ஆட்சியை நடத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தவர். சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள மீதமுள்ள 13 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் சிறைத்துறையில் காய்கறி கொள்முதலில் பல நூறு கோடி ஊழல் நடந்தது. தற்போது அந்த முறைகேடுகள் களையப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக நேரடியாக விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை முழுமையாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர் அகிலன் விவகாரத்தில் அரசு எதையும் மூடி மறைக்கவோ, பெற்றோரிடம் சமரசம் செய்யவோ முயற்சி செய்யவில்லை. காவல்துறையினருக்கு முழு விசாரணை சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆசிரியர் கைது விவகாரத்திலும் விசாரணை அதிகாரிகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள். அரசின் சார்பில் எந்தத் தலையீடும் இருக்காதும் என்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...