கோவை மாணவன் அகிலன் வழக்கு: குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்; சகோதரிக்கு அரசு வேலை

கோவை: பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அகிலனின் சகோதரிக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன், கடந்த 21-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவனின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இரண்டு மாணவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Advertisement

ஆனால், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவனின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு நாட்களாகப் போராட்டம் நீடித்த நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, ஆறாவது நாளான நேற்று மாணவனின் உடற்கூராய்வுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாணவனின் தற்கொலைக்குக் காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Advertisement

இந்நிலையில், அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் ஆகியோர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவனின் குடும்பத்தினரைச் சந்தித்தனர். அப்போது, அரசின் சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினர். மேலும், அகிலனின் சகோதரி நேத்ராவுக்கு ஆனைகட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட வெண்மணி, “கோவை மாநகர காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்ததால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்று விசாரணை மாற்றப்பட்டிருப்பது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம்” என்றார். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி, அகிலனின் சகோதரிக்குக் கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்ததாகவும், தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி, குடும்பத்துக்கு மொத்தம் ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெண்மணி கூறினார். மீதமுள்ள தொகையுடன், முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கூடுதல் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதே தங்களது முக்கியக் கேள்வி என வெண்மணி தெரிவித்தார். காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாகவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரியதாகவும், ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையே, மாணவனின் தந்தை அசோக்குமார் கூறுகையில், “நாளை காலை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து மகனின் உடலைப் பெற்று, பீளமேடு மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். மகனின் மரணத்துக்குக் காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததால், மகனின் உடலைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க ரூ.75 கோடி திட்டம்!

கோவை மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க ரூ.75 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சாலைப் பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...