கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் வெற்றி காய்கறிகள் தொகுப்பு விற்பனை துவங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில், ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி, தேங்காய் என 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிது.
அதன்படி கோவையில் சிந்தாமணி பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் காய்கறி சிறப்பு தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 13 கூட்டுறவு அங்காடிகளில் இந்த விற்பனை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவையில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், பருவமழையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.






