கோவை: கோவை சின்னவேடம்பட்டியில் பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட சாலை, மழையால் சேறும் சகதியுமாக மாறியதால் சரக்கு வாகனம் ஒன்று சிக்கியது. இதேபோல், வடவள்ளியில் மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தெருவிளக்குகள் எரியாததால் சிரமப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சின்னவேடம்பட்டி DVP இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டீல் நிறுவனத்திற்குப் பொருட்களை ஏற்றி வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம், சாலையில் இருந்த பள்ளம் மற்றும் சகதியில் சிக்கிச் சாயும் நிலைக்குச் சென்றது.
அப்பகுதியில் பாதாள சாக்கடைக் குழாய்கள் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட சாலை முறையாகச் சீரமைக்கப்படாததே இதற்குக் காரணம் எனத் தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மழைநீர் தேங்குவதால் சாலையில் வாகனங்களை இயக்குவதும் நடந்து செல்வதும் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், “இங்குள்ள நிறுவனங்களில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சேறும் சகதியுமாக உள்ள பாதையில் தினமும் சென்று வருவது சிரமமாக உள்ளது. வழுக்கி விழும் அபாயமும் இருக்கிறது. பலமுறை புகார் அளித்தும் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.
இதனிடையே, வடவள்ளி கருப்பசாமி முதலியார் வீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தெருவிளக்குகள் எரியவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதாகவும் பொதுமக்கள் நடந்து செல்லச் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும், இருள் சூழ்ந்திருப்பதால் திருட்டு அச்சம் இருப்பதாகவும், விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் கவலையடைவதாகவும் தெரிவித்தனர்.
சின்னவேடம்பட்டியில் தோண்டப்பட்ட சாலையை உடனடியாகச் சீரமைக்கவும், வடவள்ளியில் பழுதடைந்த தெருவிளக்குகளைச் சரிசெய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சின்னவேடம்பட்டியில் பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட சாலை சகதியாக மாறியதால் சரக்கு வாகனம் சிக்கியது. வடவள்ளியில் மூன்று வாரங்களாகத் தெருவிளக்குகள் எரியவில்லை எனப் புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.






