கோவை: தீபாவளிக்கு முன்னிட்டு இன்று முதல் கொடிசியா மைதானத்தில் தற்காலிக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைவரும் அதற்கு தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, அணிகலன்கள் வாங்குவது என தேவையான பொருட்களை வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அதே சமயம் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு உறவினர்கள் இல்லங்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். நிலையில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் வழிகாட்டுதலின்படி, 08.11.2026 அன்று தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும், அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து முனையம் அமைக்கப்படுகிறது.
இன்று 06.11.2026 முதல் 08.11.2026 வரையிலான மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான ஆம்னி பேருந்துகளும் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் தற்காலியாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில், பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகள் நிழற்குடை வசதி மற்றும் மின்வசதிகள் ஆகியவை கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார் பெறப்படும் பட்சத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






