கோவை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, கோவையில் ரசிகர்கள் மேளதாளம் முழங்க, கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
படத்தின் முதல் காட்சி காலை 6 மணிக்குத் திரையிடப்பட்டதால், அதிகாலையிலேயே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கினர். தங்களது அபிமான நடிகரின் திரைப்படத்தை முதல் காட்சியிலேயே பார்க்கும் ஆர்வத்துடன் திரண்ட ரசிகர்கள், ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பெண்களும் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருகை தந்து படத்தை ஆர்வத்துடன் பார்த்தனர். அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டதால், திரையரங்குகள் முன்பு உற்சாகமான சூழல் காணப்பட்டது.
இதையொட்டி, கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் திரையரங்கம் முன்பு பட வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நற்பணி இயக்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகளும் ரசிகர்களும் பங்கேற்றனர்.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற கொண்டாட்டத்தில் ரசிகர்கள் நடனமாடினர். தொடர்ந்து, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். பட்டாசுகள் வெடித்தும் திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா நடித்த திரைப்படத்தைக் காலை 6 மணிக்கே முதல் காட்சியாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிகாலை காட்சிக்காகக் காத்திருந்ததாகவும், பட வெளியீட்டை அனைவரும் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினர்.
Video
மேலும், காலை 6 மணிக்குத் திரைப்படத்தின் முதல் காட்சியைத் திரையிட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நற்பணி இயக்கத்தின் நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். ரசிகர்களின் மேளதாளம், நடனம் மற்றும் கொண்டாட்டங்களால் திரையரங்கம் முன்பு பண்டிகைச் சூழல் நிலவியது.






