மெயின் பிசினஸ் திருட்டாம்… சைடு பிசினஸ்தான் சேவை! கோவையில் சிக்கிய நடிகர்!

கோவை: சென்னை–திருவனந்தபுரம் மெயில் ரயிலில் 47 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில், குறும்பட நடிகர் பாலமுருகன் கோவையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 36.42 பவுன் தங்கம் மீட்கப்பட்டது.

திரைப்படங்களில் நடிக்கும் ஆசை, சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள், ஊருக்குள் தாராளப் பிரபு வேஷம்… ஆனால், நிஜ வாழ்க்கையில் ரயில்களில் கைவரிசை காட்டும் கொடூரக் கொள்ளையன்.

Advertisement

சினிமா கதையையே மிஞ்சும் வகையில், பாலக்காடு ரயிலில் 50 பவுன் நகையைத் திருடி, ஊருக்குள் தீபாவளிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்த ‘இரட்டை வாழ்க்கை’ வாழ்ந்த நடிகரைக் கேரள காவல்துறையும் ரயில்வே பாதுகாப்புப் படையும் (RPF) இணைந்து கோவையில் வளைத்துப் பிடித்துள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 66 வயது மூதாட்டியான குமாரி, தனது குடும்பத்தினருடன் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி சென்னை–திருவனந்தபுரம் மெயில் ரயிலில் கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

தனது பேத்தியின் திருமணத்திற்காகப் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துச் சேமித்த சுமார் 47 பவுன் தங்க நகைகளைப் படுக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.

ரயில் பாலக்காட்டை நெருங்கியபோது, நகைப் பை மாயமாகியிருந்ததைக் கண்டு மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் கதறித் துடித்தனர்.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், கேரள ரயில்வே எஸ்.பி. கிருஷ்ணகுமார் மற்றும் ஆர்.பி.எஃப். டி.எஸ்.சி. அம்பு பி. குமார் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையில் சுமார் 600 சி.சி.டி.வி. (CCTV) கேமராக்களின் பதிவுகளை அறிவியல்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்தனர்.

சந்தேக நபர்களின் எண்ணிக்கையை 10-லிருந்து 5-ஆகக் குறைத்து, டிஜிட்டல் தடயவியல், சோஷியல் மீடியா டிராக்கிங் மற்றும் செல்போன் கோபுரச் சிக்னல்களை வைத்து மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தினர்.

குற்றவாளி தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் என்பதை உறுதிசெய்து, கோயம்புத்தூரில் உள்ள அவரது வாடகை வீட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து 36.42 பவுன் தங்கம் முதற்கட்டமாக மீட்கப்பட்டது.

கைதான பாலமுருகனின் நிஜ முகம் வெளிவந்தபோது காவல்துறையினரே மிரண்டு போயினர்.

இவர் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடிகராகவும், வீடியோ எடிட்டராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு திண்டுக்கல்லில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் ஜாலியாகத் தீபாவளி கொண்டாடியுள்ளார். ஊர் மக்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்கி, ஆன்மீகவாதி போலவும் கருணை உள்ளம் கொண்ட கொடை வள்ளல் போலவும் சீன் போட்டுள்ளார்.

இவர் ஏற்கெனவே மதுரையில் ரயிலில் லேப்டாப் திருடிய வழக்கில் 40 நாட்கள் சிறையில் இருந்தவர் என்பதும், ரயில்களில் பயணிகளின் உடைமைகளைக் குறிவைக்கும் பெரிய கொள்ளைக் கும்பலின் முக்கிய நபராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், ரயிலில் கொள்ளையடித்த பிறகு தடயங்களை மறைக்கவும், போலீசாரைத் திசைதிருப்பவும் 5 பேருந்துகளிலும் ஆட்டோக்களிலும் பயணித்துள்ளார்.

சி.சி.டி.வி. கேமராக்களைப் பார்க்கும்போதெல்லாம் கைகளால் நெற்றியை மூடிக்கொள்வது, முகம் தெரியாதவாறு மாஸ்க் அணிவது மற்றும் பயணத்தின் நடுவே ஆடைகளை மாற்றுவது எனப் பக்காவாகத் திட்டமிட்டுள்ளார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் தவெக பெண் நிர்வாகி பாலியல் புகார்… சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீதே பரபரப்பு குற்றச்சாட்டு!

கோவை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...