கோவை: கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு பகீர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் திமுக ஆட்சியில் ரூ.301.71 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைவதற்குள், சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது. தவெக வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். கடந்த மாதம் 16ம் தேதி பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த அறிவுலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

அதன்பிறகு, நவம்பர் முதல் வாரத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்டார். அவருடன் திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ. வேலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
அனைத்தும் போலி
ஸ்டாலின் வந்து சென்ற மறுநாளே பெரியார் அறிவுலகத்தில் பிரளயம் வெடித்தது. அதாவது, நூல்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிக விலை கொடுத்து போலி நூல்கள் வாங்கப்பட்டு, அறிவுலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

அகல் விளக்கு,ஃபீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களின் போலி பெயரில் சுமார் 1,800 முதல் 2,200க்கும் மேற்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1947ல் தமிழகத்தின் முதல் முதல்வர் முத்துவேல் சுப்பையா ஐயர் என்பது போன்ற வரலாற்று பிழைகள் கொண்ட பல்வேறு தவறுகள் அந்த போலி நூல்களில் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமில்லாமல், த்ரிஷா விஜய், லட்சுமி மோகன், தாமரை பன்னீர், மோனிகா ரவி போன்ற போலி எழுத்தாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
யார் ஆட்சியில்?
வழக்கமாக பிற பதிப்பகங்களில் ரூ.300க்கு விற்பனை செய்யப்படும் நூல்களை, போலி பெயர்களில் ரூ.1,000க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களில் 2026 ஜூன் மாதம் என்று அச்சிடப்பட்டுள்ளதால், இது தவெக ஆட்சியில் நடந்த முறைகேடு என்று திமுகவினரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே நூல்கள் கொள்முதல் செய்ய நிதி பரிவர்த்தனை செய்து விட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதால், திமுக தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தவெகவினரும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான தெளிவான தகவல் ஏதுமில்லாத நிலையில், சென்னை கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்பட பல மாவட்டங்களின் நூலகங்களிலும் போலி நூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து போலி நூல்களும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றன.
தோண்ட தோண்ட…
இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தில் மற்றொரு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது, ஆங்கில நூல்களிலும் போலி இடம்பெற்றிருப்பது ஆய்வு மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களைப் போலவே, விண்டேஜ் என்ற பிரபல பதிப்பகத்தின் பெயரில் போலியான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள போலி முகவரியைப் பயன்படுத்தியதுடன், ஒவ்வொரு நூலின் பின்புறம் இடம்பெறும் எழுத்தாளர்களின் போட்டோவிம் குளறுபடி நடந்துள்ளது. 250க்கும் மேற்பட்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அனைத்திலும் போலி சர்வதேச தரப்புத்தக எண்களே இடம்பெற்றுள்ளன. 300 பக்கங்கள் கொண்ட நூல்களை தலா சுமார் ரூ.10 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்துள்ளனர்.
விண்டேஜ்
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சதீஷ்குமார் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்;
அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களைத் தொடர்ந்து விண்டேஜ் பிரஸ் லிமிடெட் பதிப்பகத்தின் முறைகேடும் தற்போது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து நேற்று “The debate” நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன்.
முதலில் இந்நிறுவன வெளியீடுகளின் சந்தேகத்திற்குரிய அம்சத்தைக் கண்டடைந்து என் கவனத்திற்கு கொண்டுவந்தது, நண்பர் Prem Kumarதான். உடனே புகைப்படங்கள் எடுத்து அனுப்பித் தந்தார்.
நான் அதன் உள்ளடக்க, உருவாக்க நேர்த்திகளை ஆராயத் தொடங்கினேன். ஒவ்வொரு புத்தகங்களின் விலையும் ₹9990 என இருந்தது. (30-35%) தள்ளுபடி விலையில் கொள்முதல் நடைபெற்றிருக்கலாம். பக்கங்களின் சராசரி எண்ணிக்கை 300.
முதலில், இப்பதிப்பகம் லண்டனில் செயல்படுவதாக நூலில் குறிப்பிடப்படுகிறது. இணையத்தில் தேடினால், வலைதளம் ஒன்றும் அதே லோகோ மார்க்கில் செயல்படுவதை அறிந்தேன். அதிலும் நூலில் இடம்பெற்ற அதே முகவரி. அதே நூல்கள். ஆனால் வலைதளத்தில் பல கோளாறுகள் இருந்தன.
திட்டமிட்டக்கையாடல்!
- FAQ பக்கத்தில், இன்னும் Placeholder Textகளே இருந்தன. T-shirt வாங்குவதற்கான Provisionனும் இருந்தது. Template இல் இருந்து, சரிவர கட்டமைக்கவில்லை எனத் தெரிந்துகொண்டேன்.
- நூல்களை எங்கிருந்து ஆர்டர் செய்தாலும், Cash On Delivery வசதி மட்டுமே இருந்தது. லண்டனிலிருந்து இந்தியாவிற்கு ஆர்டர் செய்தாலும், பதிப்பகத்தின் அடுத்த தெருவில் ஆர்டர் செய்தாலும் ஒரே டெலிவரி கட்டணம்!
- வங்கி விபரங்களோ, பதிப்பாளர் விபரங்களோ, ஆசிரியர் குழு, எழுத்தாளர் அறிமுகங்களோ இல்லை.
- முக்கியமாக பதிப்பகத்தின் முகவரி “போலி” – 71-75 என்றொரு நிறுவனத்தின் முகவரியை தவறாகப் பயன்படுத்தி உள்ளீடு செய்திருக்கிறார்கள்.
- 71-75 என்ற நிறுவனமானது UK அரசாங்க வலைதளத்தில் “பதிப்பகம்” குறிப்பிடும் முகவரியுடன் சரியாகப் பொருந்துகிறது!
அடுத்ததாக நூல்கள் குறித்து ஆராய்ந்தால் இந்திய ISBN தளத்திலோ, UK ISBN முகமைகளின் தளத்திலோ, Worldcat போன்ற தளத்திலோ – No data found! போலி ISBN எண்கள்.

நூலின் உள்ளடக்கத்தை, பணம் செலுத்தி Drillbit தளத்தில் இறுதியாக ஆராய்ந்தேன். Emily Lawson என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் ‘Tourism: Principles, Practices and Philosophies’ நூலின் முதல் 15 பக்கங்களை ஆராய்ந்ததில் 64% கருத்துத் திருட்டும்; 70.72% AI எழுத்தும் இருப்பது தெரியவந்தது.
நூலின் பின்னட்டைக் குறிப்பில் இருக்கும் எழுத்தாளரின் புகைப்படமும் போலி (வேறொரு நபர்) – Identified via Google reverse search.
ஒரேவார்த்தையில் சொல்வதானால், திட்டமிட்டக்கையாடல்!
இத்தகு vintage press ltd நிறுவனத்தின் 100-க்கு நிகரான நூல்களை பெரியார் அறிவுலகத்தில் காணமுடிகிறது.
பதிவு அவ்வளவுதான். இனி வழக்கம்போல் தமிழ்ச் சமூகம் ‘உச்சுக்கொட்டிக்கொண்டு’ கடந்து செல்லலாம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
இது ஒருபுறம் இருக்க, மதுரை உயர்நீதிமன்ற கேள்விக்குப் பிறகு, நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.






