கோவை: கோவை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட காளம்பாளையம் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருபவர் சௌமியா.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழகத்தில் பணியாற்றி வரும் இவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, அவசர ஆலோசனைக் கூட்டம் எனக் கூறி தன்னை அழைத்து, இரவு நேரத்தில் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு உடன்படாததால், தன்னைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி, கட்சியில் இருந்து வெளியேற்ற நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மகளிர் அணி நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர் தனது வீட்டிற்கே வந்து, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
ஒன்றிய செயலாளர் தன்னை விபத்து ஏற்படுத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், அதற்கான வாட்ஸ் அப் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சௌமியா கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை மூடி மறைக்க, கருப்பசாமிக்கு நெருக்கமான சரவணன் என்பவர் பணம் மற்றும் கட்சிப் பதவி தருவதாகக் கூறி, தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள சௌமியா, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் சீண்டல், சாதிய வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்திருப்பது கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களின் விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.





