கோவை : அவிநாசியில் 37 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், பெண் உட்பட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேர் நிறுத்தம் பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரைக் கண்டதும், அங்கிருந்த பெண் உட்பட நான்கு பேர் தாங்கள் வைத்திருந்த நான்கு மூட்டைகளைப் போட்டுவிட்டுத் தப்பியோடினர்.
அந்த மூட்டைகளைச் சோதனையிட்ட போலீசார், அவற்றில் இருந்த 37 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அருகிலுள்ள பழக்கடை பகுதியில் பதுங்கியிருந்த நான்கு பேரையும் அவிநாசி போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கைதானவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பியாருல் ஷேக், ஷகீல் முஸ்தாக், ஹுமாயூன் சேக், நர்கீஸ் பீபி என்பது தெரியவந்தது. வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்து கோவை, திருப்பூர் பகுதிகளில் விநியோகிக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், நான்கு பேருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.





