கோவை: கோவை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் திருமதி தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், விதைச் சான்றளிப்புத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.
தீனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர் நாகராஜன் என்பவரது தோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை பண்ணையை ஆட்சியர் பார்வையிட்டார்.
அங்கு தென்னை, ஜாதிக்காய், காபி, பாக்கு, மிளகு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், தேக்கு, மகோகனி உள்ளிட்ட மர வகைகள் வளர்க்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். மேலும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பண்ணை நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாதம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் என்பவரது தோட்டத்தில், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ரூ.2,12,663 மதிப்பில் வழங்கப்பட்ட பவர் டில்லர் இயந்திரத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தார். மேலும், தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாசனத் திட்டத்தையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விவசாயி உஷா என்பவரது தோட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ரூ.2,09,625 மதிப்பில் வழங்கப்பட்ட பவர் டில்லர் இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தென்னம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயி சென்னூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையின் வி.ஆர்.ஐ. 10 ரக விதைப் பண்ணையையும் பார்வையிட்டார். மேலும், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை இந்த விதைப் பண்ணையில் செயல்படுத்தி, இதர விவசாயிகளும் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் முறையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு நடைபெற்றது.





