கோவை: கோவையில் நவம்பர் 15-ம் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மாவட்டப் பிரிவு சார்பில் வரும் 15.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது.
கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பிருந்து போட்டி தொடங்கி, எல்.ஐ.சி. வழியாக அண்ணா சிலையை அடைந்து, மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தை வந்தடையும் வகையில் போட்டிக்கான வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் போட்டி நடைபெற உள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வயதுச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை போட்டி நாளன்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும். மேலும், 4 முதல் 10-வது இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
போட்டியில் எவ்வித எதிர்பாராத நிகழ்வுகளும், தனிப்பட்ட இழப்புகளும் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை பங்கேற்பாளர்களே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





