கோவை: முன்னாள் நீதிபதி எம்.ஆர். முரளிதரன் நியமனத்தைத் திரும்பப் பெறக் கோரி ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி எம்.ஆர். முரளிதரன் கடந்த நவம்பர் 10ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் லெனின், முன்னாள் நீதிபதி எம்.ஆர். முரளிதரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிவித்ததுடன், அவரது நியமனம் சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது என்றும் விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் சாதியப் பதற்றங்களும் ஆணவக் கொலைகளும் அதிகரித்து வரும் சூழலில், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆணையத்தின் தலைவராக நடுநிலையான ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தகுதியும் சமூகநீதியில் அக்கறையும் கொண்ட பல முன்னாள் நீதிபதிகள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவரை ஆணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், தற்போதைய நியமனத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த நீதிபதியால் தான் மணிப்பூரில் கலவரம் உண்டானது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.


