கோவை: கோவையை ரேபிஸ் இல்லாத நகரமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியை 2030-ஆம் ஆண்டிற்குள் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்கும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெருநாய்களுக்கு தீவிரமாக வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 1,11,074 நாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியின் 14, 98 மற்றும் 100-வது வார்டுகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 800 சமூக நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இந்தத் தடுப்பூசி முகாமின் முக்கிய நோக்கமாகும். இதற்காக மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் படிப்படியாக தடுப்பூசி முகாம்களை நடத்தி, அதிக எண்ணிக்கையிலான சமூக நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உலகளவில் 2030-ஆம் ஆண்டிற்குள் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் இலக்கை அடையும் வகையில், கோவை மாநகராட்சியும் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கோவையை ரேபிஸ் பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


