கோவை: வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரியா என தமிழ்நாடு விசாயிகளின் கோரிக்கை…
வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் .
நாடு முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. நீர் வீணாவதை தடுக்கும் விதமாகவும் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் விதமாகவும் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இது பல்வேறு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இதனை மறுத்துள்ளது.
வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையானது அல்ல. மத்திய அரசு கொண்டுவரவுள்ள நீர் மேலாண்மை திட்டமானது நீர் பாசன செலுத்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இது சம்பந்தமாக கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளனர். தமிழகத்தில் நீர் தேவை என்பது அண்டை மாநிலங்களை நம்பியே இருப்பதாகவும் தேவைக்கு அதிகமாக விவசாயிகள் யாரும் நிலத்தடி நீரை பயன்படுத்துவதில்லை என்றும் நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்குவதற்கு நிதியை ஒதுக்கீடு செய்யாமல் விவசாயிகளை குறி வைக்கும் செயலாகவே இந்தத் திட்டத்தை கருதுவதாகவும் பல்வேறு போராட்டங்களை தாண்டி தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண்மை மின்சாரம் அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.