கோவை: என்ன செய்தால் காவல்துறைக்கு மக்களிடம் ஆதரவு இருக்கும் என மகாராஷ்டிரா ஆளுநர்சி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…
ஜிஎஸ்டி தினத்தை முன்னிட்டு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையின் சார்பில் ஜிஎஸ்டி தின கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement

இதில் சிறப்ப விருந்தினராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகத்தின் தலைமை ஆணையாளர் தினேஷ் பங்கர்கர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள், தொழில் நிறுவனத்தினர் மற்றும் ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில் துறையினர் எளிதாக வர்த்தகம் செய்வதோடு நேர்மையாக நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியையும் செலுத்தியுள்ளதாக கூறினார்.
Advertisement

மேலும் முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் இரட்டிப்பாகி உள்ளது திட்டத்தின் பலனை உணர்த்துவதாகவும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இத்திட்டம் அனைவருக்கமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்துள்ளதாகவும் ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அதிகமாக சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தி வரும் நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டு விருதுகளை வழங்கினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தவர்,
காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை அனைவரும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்றும்,
அதற்கு வரி சட்டங்கள் மட்டும் விதிவிலக்கல்ல என்றார். ஜிஎஸ்டி என்பது 160 நாடுகளில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தம்
அது தற்பொழுது இந்தியாவிலும் அமலாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வந்த பிறகு தான் சேல்ஸ் டாக்ஸ் செக் போஸ்ட்கள் ஒரே இரவில் எடுக்கப்பட்டது, தொழில் முனைவோர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது ஜிஎஸ்டி தான் என்றார்.
லாக்கப் மரணம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதே நேரத்தில் அப்பாவி மக்களை துன்புறுத்துவது என்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
ஒருவரை பார்த்தாலே இவர் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பாரா இல்லையா என்பது காவல்துறைக்கு தெரிந்து விடும் என்றும், யாரோ ஏதோ சொன்னார்கள் ஏதோ அழுத்தம் வந்தது என்று அப்பாவியை குற்றவாளி என்று கருதி தண்டிக்கின்ற போக்கை காவல்துறை கைவிட வேண்டும் அப்படி இருந்தால் தான் காவல்துறைக்கு மக்களின் ஆதரவு இருக்கும் என தெரிவித்தார்.