கோவை: கோவை தடாகம் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்…
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் ஆன தடாகம் மாங்கரை நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தடாகம் அடுத்த கீழ்பதி வீரபாண்டி பகுதியை சேர்ந்த மருதன் என்ற 65 வயது முதியவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியிலிருந்து மருதங்கரைக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது அங்கே வந்த ஒற்றைக்காட்டு யானையை பார்த்து அதிர்ந்து போன அவர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடுவதற்கு முயற்சித்துள்ளனர். முதியவர் மருதன் அருகில் இருந்த முட்புதருக்குள் நுழைந்த நிலையில் காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. அதனைக் கண்டு ராஜேந்திரன் சத்தமிடவே காட்டு யானை அங்கிருந்து சென்றுள்ளது.
இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் முதியவர் மருதனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் யானை தாக்கியதில் கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது வனத்துறையினர் அப்பகுதியில் காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்