கோவை: கோவையில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ,6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் நேற்று இரவு, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது , திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது.
இரண்டு கார்கள், ஒரு லாரி மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து ஆம்னி பேருந்து மோதியது. இதில் சுந்தர்ராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வாகனங்களில் வந்த
6 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
பேருந்து மோதியதில் கார்கள் பலத்த சேதம் அடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் கார்களில் சிக்கி இருந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் ,
பேருந்து ஓட்டுனர் பயணி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில், ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் இடையே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.