கோவை: கோவை வேஸ்டபிள் எனர்ஜி திட்டம் 250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், செம்மொழி பூங்கா பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுரையின்படி இன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். ஆய்வின்போது செம்மொழி பூங்காவிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் கூடுதலாக 50 கோடி வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார் என்றும் எனவே முதலமைச்சரின் அறிவுரையை பெற்று அந்த நிதியை ஒதுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் ஆர் எஸ் புரம் மாதிரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மாணவர் விடுதி, மற்றும் வகுப்பாறைகள் திறக்கப்படுவதாகவும் மேலும் ஆர் எஸ் புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தளத்திலான ஹாக்கி மைதானம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். கவுண்டம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை மாற்று நிலையத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். உக்கடம் பேருந்து நிலையத்தை நவீன முறையில் மாற்றும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் 70 கோடி செலவில் பயோமெனிக் முறையில் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று துவங்கப்படும் என தெரிவித்தார். மேலும் கோவையில் 250 கோடி மதிப்பில் wastable energy என்ற திட்டத்தை துவக்க உள்ளதாகவும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அது என தெரிவித்தார்.
UGD திட்டம் குறிச்சி குனியமுத்தூர் பகுதியில் முடிக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள பணிகள் முடிப்பதற்கு சற்று தாமதமாகும் என தெரிவித்த அவர் ஆறு மாத காலத்திற்குள் அதனை முடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். வரிகள் யாருக்கு உயர்ந்து உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்டு கூறினால் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும், இது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்ட ஒன்று என தெரிவித்தார். அதே சமயம் மற்றும் மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைவுதான் எனவும் தெரிவித்தார். 600 சதுர அடிக்கு கீழ் உள்ளதற்கு எந்த ஒரு வரிகளும் கிடையாது என்றும் தெரிவித்தார். முதலமைச்சரும் வரியை ஒருமுறை உயர்த்திவிட்ட பிறகு மீண்டும் உயர்த்த கூடாது என்று கூறி இருப்பதாகவும் வரி உயர்வு என்பது ஏற்கனவே போடப்பட்டது தானே தவிர புதிதாக எந்த வரியையும் உயர்த்தவில்லை எனவும் தெரிவித்தார். வரி உயர்வு குறித்து குறிப்பிட்டு தெரிவித்தால் அதனை திருத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.