கோவை: கோவையில் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சித்த போது யானை தாக்கி மருத்துவர் படுகாயம் அடைந்தார்.
கோவையில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த சென்ற மருத்துவரை காட்டு யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் ஊருக்குள் சுற்றி வரும் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன் பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த அந்த காட்டு யானை பிடிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த அருகில் சென்ற வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்ட வனத்துறையினர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள பிரபல எழும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை அந்த யானை பிடிபடாததால் மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.